அயோத்தி வழக்கில் கடவுள் முன் அமர்ந்து தீர்வு கேட்டதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பதவிக்காலம் நவம்பர் 11-ல் முடிவுக்கு வருகிறது. இதை முன்னிட்டு, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பெயரை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பரிந்துரைத்துள்ளார்.
இதனிடையே மஹாராஷ்டிர மாநிலம் புனேவிலுள்ள தனது சொந்த கிராமத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கௌரவிக்கப்பட்டார். கிராம மக்கள் முன்பு பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், அயோத்தி வழக்கில் கடவுள் முன் அமர்ந்து தீர்வு கேட்டதாகக் கூறினார்.
"நீதிமன்றங்களில் அடிக்கடி தீர்ப்பு கோரி வழக்குகள் வரும். ஆனால் எங்களால் ஒரு முடிவுக்கு வர முடியாத சூழல் ஏற்படும். அயோத்தி வழக்கிலும் (பாபர் மசூதி - ராமஜென்ம பூமி விவகாரம்) இதுபோன்ற நிலைதான் ஏற்பட்டது. இந்த வழக்கு மூன்று மாதங்களாக என் முன் இருந்தது. கடவுள் முன் அமர்ந்து, இதற்குத் தீர்வு காண வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன்.
உங்களுக்குக் கடவுள் மீது நம்பிக்கை இருந்தால், நிச்சயம் கடவுள் இதற்கு வழிகாட்டுவார். என்னை நம்புங்கள்" என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார்.
அயோத்தியில் பாபர் மசூதி - ராமஜென்மபூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ல் தீர்ப்பு வழங்கியது. அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயிலைக் கட்டுவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதற்குப் பதிலாக மசூதிக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் ஒதுக்கக்கோரி உத்தரவிடப்பட்டது. இந்தத் தீர்ப்பு வழங்கிய அமர்வில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இடம்பெற்றிருந்தார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி 22 அன்று சிலை பிரதிஷ்டை நடைபெற்றது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஜூலை மாதம் அயோத்தி சென்று ராமர் கோயிலில் வழிபட்டார்.