இந்தியா

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு: சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

கடந்த ஜன.18-ல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் சஞ்சய் ராய்.

ராம் அப்பண்ணசாமி

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்குக் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது சியல்டா குற்றவியல் நீதிமன்றம்.

மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கருத்தரங்கக் கூடத்தில் வைத்து, கடந்த 2024 ஆகஸ்ட் 7-ல் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதன்பிறகு கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சுத் திணறி அவர் உயிரிழந்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கொலை தொடர்பாக வழக்குப் பதிந்த கொல்கத்தா காவல்துறை, காவல்துறையில் முன்பு தன்னார்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரைக் கைது செய்தனர். இதனை அடுத்து இந்த வழக்கு தொடர்பான புலன் விசாரணையை சிபிஐக்கு மாற்றப்பட்டது.

சியல்டா குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டிருந்த சஞ்சய் ராய்க்குத் தூக்கு தண்டனை விதிக்கக் கோரியிருந்தது சிபிஐ. அத்துடன், சஞ்சய் ராய்க்கு உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கவேண்டும் எனக் கொலையான பெண் மருத்துவரின் பெற்றோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞரும் கோரிக்கை வைத்திருந்தார்.

சியல்டா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிறைவுபெற்ற பிறகு, சஞ்சய் ராய் குற்றவாளி எனக் கடந்த ஜன.18-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று (ஜன.20) உத்தரவிட்டார் சியல்டா குற்றவியல் நீதிமன்ற நீதிபதி.

மேலும், பெண் பயிற்சி மருத்துவரின் குடும்பத்தினருக்கு ரூ. 17 லட்சம் இழப்பீடாக வழங்குமாறு மேற்கு வங்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.