கோப்புப்படம் ANI
இந்தியா

சயிஃப் அலி கானுக்கு உண்மையில் காயமா அல்லது நடிக்கிறாரா?: மஹா. அமைச்சர் பேச்சால் சர்ச்சை

"'கான்' தாக்குதலுக்குள்ளானால் மட்டும் தான் அனைவரும் பேசுகிறார்கள். ஹிந்து நடிகர் தாக்கப்பட்டால் யாரும் பேச மாட்டார்கள்."

கிழக்கு நியூஸ்

சயிஃப் அலி கான் உண்மையில் தாக்குதலுக்குள்ளானாரா அல்லது நடிக்கிறாரா என்ற சந்தேகம் எழுவதாக மஹாராஷ்டிர கேபினட் அமைச்சர் நிதேஷ் ராணே கேள்வியெழுப்பியுள்ளார்.

மும்பையில் மேற்கு பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார் பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கான். கடந்த ஜனவரி 15 அன்று இரவில் அவரது இல்லத்துக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், சயிஃப் அலி கானை கத்தியால் குத்திவிட்டு தப்பித்துச் சென்றார்.

இதில் பலத்த காயமடைந்த சயிஃப் அலி கான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன. கடந்த செவ்வாய்க்கிழமை சயிஃப் அலி கான் வீடு திரும்பினார்.

சயிஃப் கான் இல்லத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியவர் ஷரீஃபுல் இஸ்லாம் எனும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்று காவல் துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தற்போது காவல் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளார்.

மஹாராஷ்டிர கேபினட் அமைச்சர் நிதேஷ் ராணே, சயிஃப் அலி கான் குறித்து பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

"முன்பெல்லாம், வங்கதேசத்திலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக வந்தவர்கள் சாலையோரத்தில் நின்று கொண்டிருப்பார்கள். தற்போது வீடுகளுக்கு நுழைகிறார்கள்.

சயிஃப் அலி கான் மருத்துவமனையிலிருந்து வந்ததைப் பார்க்கும்போது, அவர் உண்மையில் தாக்குதலுக்குள்ளானாரா அல்லது நடிக்கிறாரா எனத் தெரியவில்லை. ஒருவேளை வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர், சயிஃப் அலி கானைக் கொண்டு செல்ல நினைத்திருக்கலாம். கான் தாக்குதலுக்குள்ளானால் மட்டும் தான் அனைவரும் பேசுகிறார்கள். ஹிந்து நடிகர் தாக்கப்பட்டால் யாரும் பேச மாட்டார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜிதேந்திர அவாத், சுப்ரியா சுலே ஆகியோர் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் பற்றி பேசுவதில்லை. சயிஃப் அலி கான் பற்றி மட்டும்தான் கவலை. தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார் அவர்.