"சத்குரு நன்றாக தேறி வருகிறார், சீரான முன்னேற்றம் அடைந்து வருகிறார்": ஈஷா அறக்கட்டளை
"சத்குரு நன்றாக தேறி வருகிறார், சீரான முன்னேற்றம் அடைந்து வருகிறார்": ஈஷா அறக்கட்டளை  
இந்தியா

சத்குரு நன்றாக தேறி வருகிறார், உடல்நிலையில் சீரான முன்னேற்றம்: ஈஷா அறக்கட்டளை

கிழக்கு நியூஸ்

சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ஆன்மிகத் தலைவர் ஜக்கி வாசுதேவ், மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டதை அடுத்து ஆபத்தான நிலையில் தில்லி அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அவசர நிலையில் மூளையில் அறுவசை சிகிச்சை செய்யப்பட்டது.

தற்போது நலமாக இருக்கிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்று ஈஷா அறக்கட்டளை எக்ஸ் தளம் மூலம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் சத்குருவின் உடல்நலம் குறித்து தொலைபேசி மூலம் கேட்டறிந்தனர். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் குணமடைய வாழ்த்தினர்.

கடந்த நான்கு வாரங்களாக சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு தாங்கமுடியாத தலைவலி இருந்து வந்தது. அதையும் பொருட்படுத்தாமல் அவர் மார்ச் 8 ஆம் தேதி மஹா சிவாரத்திரி விழாவை நடத்தினார்.

கடந்த 17 ஆம் தேதி சத்குருவை அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த நரம்பியல் நிபுணர் டாக்டர் வினித் சூரி, பரிசோதித்த போது அவருக்கு மூளையில் இரத்தக் கசிவு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். பின்னர் டாக்டர் வினித் சூரி, டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர் தியாகி மற்றும் டாக்டர் எஸ் சாட்டர்ஜி ஆகியோர் அடங்கிய மருத்துவர்கள் குழு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள் இரத்தப்போக்கைக் குறைக்க அறுவை சிகிச்சையை நடத்தினர்.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.