பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 12-வது முறையாக தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
79-வது சுதந்திர நாள் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டைக்கு வரும் முன்பு, மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தில்லி செங்கோட்டைக்குச் சென்ற பிரதமர் மோடி, தொடர்ந்து 12-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார். இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் வானிலிருந்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதன்பிறகு, நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.
"75 ஆண்டுகளாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு கலங்கரை விளக்கமாக இருந்து வழிகாட்டி வருகிறது. அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.
பஹல்காமில் பயங்கரவாதிகளை எல்லையைக் கடந்து வந்து மதத்தின் பெயரைக் கேட்டு மக்களைக் கொன்றுள்ளார்கள். இந்தப் படுகொலை ஒட்டுமொத்த உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒட்டுமொத்த இந்தியாவும் சீற்றம் கண்டது. அந்தச் சீற்றத்தின் வெளிப்பாடு தான் ஆபரேஷன் சிந்தூர்.
ஆபரேஷன் சிந்தூரில் பங்கெடுத்த துணிச்சல் மிகு வீரர்களுக்கு வீர வணக்கத்தைச் செலுத்துகிறேன். கற்பனையில் எட்டாத அளவுக்கு நம் துணிச்சலான வீரர்கள் எதிரிகளைத் தண்டித்துள்ளார்கள்.
ஏப்ரல் 22-க்குப் பிறகு நம் ஆயுதப் படைகளுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. அவர்களே வியூகம் வகுத்தார்கள், இலக்கை நிர்ணயித்தார்கள், நேரத்தை நிர்ணயித்தார்கள். பல பத்து ஆண்டுகளாக நம் படைகள் செய்யாததை அவர்கள் செய்தார்கள்.
பாகிஸ்தானில் ஏற்பட்ட அழிவு நாளுக்கு நாள் வெளிவந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அதுபற்றிய புதிய தகவல் வெளியாகி வருகிறது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் எப்படி நியாயமற்ற வகையில் ஒரு சார்புடையதாக இருந்தது என்பதை இந்திய மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள். இந்த ஒப்பந்தம் கடந்த 70 ஆண்டுகளாக நம் விவசாயிகளுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சேதத்தை உண்டாக்கியுள்ளது. நீரின் உரிமை தற்போது இந்திய விவசாயிகளுக்கு மட்டுமே சொந்தம். அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என இந்தியா முடிவு செய்துவிட்டது.
செமி கன்டக்டர் திட்டத்தில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் உருவாக்கப்பட்ட, இந்திய மக்களால் தயாரிக்கப்பட்ட செமி கன்டக்டர் சிப்கள் சந்தையில் களமிறங்கும்.
ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதன் மகத்துவத்தைப் பார்த்தோம். சில விநாடிகளில் எதிரிகளைத் தாக்கி அழித்த ஆயுதங்களைப் பார்த்து எதிரிகள்கூட அதிர்ச்சியடைந்தார்கள். சுயசார்பாக இல்லாதபட்சத்தில் நம்மால் ஆபரேஷன் சிந்தூரை இந்தளவுக்கு எடுத்துச் சென்றிருக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் சுயசார்பை இலக்காக நிர்ணயித்துச் செயல்பட்டோம். அதன் பலன்களை இன்று பார்க்கிறோம்.
விண்வெளியில் ககன்யான் திட்டத்துக்குத் தயாராகி வருகிறோம். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தைக் கட்டமைப்பதற்கான பணிகளில் நாம் ஈடுபட்டு வருகிறோம்.
இந்தத் தீபாவளியை இரட்டைத் தீபாவளியாக்கப் போகிறேன். கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டியில் முக்கிய சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறை சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளப்போகிறோம். இது நாடு முழுக்க வரிச் சுமையைக் குறைக்கும்.
இந்திய இளைஞர்களுக்காக ரூ. 1 லட்சம் கோடி மதிப்புடைய திட்டத்தைத் தொடக்கி வைக்கவுள்ளோம். இன்று முதல் பிரதம மந்திரி பாரத் ரோஜ்கார் யோஜனா திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தனியார் துறையில் முதல் வேலையைப் பெறும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு அரசு சார்பில் ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும். நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்தத் திட்டம் இளைஞர்களுக்கு ஏறத்தாழ 3.5 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
100 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் எனும் அமைப்பு உருவானது என்பதை நான் பெருமையுடன் குறிப்பிடுவேன். நாட்டுக்கு 100 ஆண்டுகள் சேவையாற்றியது என்பது பெருமைக்குரிய பொன்னான அத்தியாயம். நாட்டு நலனுக்காக ஆர்எஸ்எஸ் சேவகர்கள் தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்துள்ளார்கள். ஒரு வகையில் பார்க்கும்போது, உலகிலேயே மிகப் பெரிய தன்னார்வ அமைப்பு ஆர்எஸ்எஸ் தான். இதற்கு 100 ஆண்டுகளுக்கான அர்ப்பணிப்பின் வரலாறு உள்ளது" என்றார் பிரதமர் மோடி.
Narendra Modi | Independence Day | PM Modi | Independence Day Celebration | Red Fort |