PRINT-89
இந்தியா

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ. 944 கோடி அபராதம் விதிப்பு!

இந்த உத்தரவு எங்கள் விமான நிறுவனத்தின் செயல்பாடுகள், நிதி மற்றும் பிற நடவடிக்கைகளில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

ராம் அப்பண்ணசாமி

2021-22 மதிப்பீட்டு ஆண்டிற்காக, வருமான வரித்துறையால் ரூ. 944.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனத்தின் தாய் அமைப்பான இண்டர்குளோப் ஏவிஏஷன் லிமிடெட் நிறுவனம் இன்று (மார்ச் 30) தகவல் தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறையின் இந்த அபராத உத்தரவு தவறானது மட்டுமல்லாமல் அற்பமானது என்றும், அதை எதிர்த்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இண்டர்குளோப் ஏவிஏஷன் லிமிடெட் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

`2021-22 மதிப்பீட்டு ஆண்டை முன்வைத்து ரூ. 944.20 கோடி அபராதம் விதிப்பதற்கான உத்தரவை வருமான வரித் துறை பிறப்பித்துள்ளது. பிரிவு 143(3)-ன் கீழ் வருமான வரி ஆணையர் (மேல்முறையீடு) அலுவலகத்தில் மதிப்பீடு உத்தரவு தொடர்பாக நாங்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கருதி இந்த அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த மனு இன்னமும் நிலுவையில் உள்ளது. வருமான வரித்துறையால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டப்பூர்வமானது அல்ல என்பது மட்டுமல்லாமல், அது பிழையானது மற்றும் அற்பமானது என்று எங்கள் நிறுவனம் உறுதியாக நம்புகிறது. அதன்படி மேற்கூறிய உத்தரவுக்கு எதிராக பொருத்தமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எங்கள் நிறுவனம் எடுக்கும்.

இந்த உத்தரவு எங்கள் விமான நிறுவனத்தின் செயல்பாடுகள், நிதி மற்றும் பிற நடவடிக்கைகளில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையின் அபராத உத்தரவு கிடைத்த பிறகு, இண்டிகோ நிறுவனப் பங்கின் மதிப்பு 0.32 சதவீதம் குறைந்து ரூ. 5,113 ஆக இருந்தது. டிசம்பர் 2024 நிலவரப்படி, இண்டிகோ நிறுவனர்கள் வசம் நிறுவனத்தின் 49.27 சதவீத பங்குகள் உள்ளன.