இந்தியா

ஜார்க்கண்டில் மகளிருக்கு மாதம் ரூ.2,100: பாஜக வாக்குறுதி

"ஆண்டுக்கு இரு சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்."

கிழக்கு நியூஸ்

ஜார்க்கண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ. 2,100 உதவித் தொகை வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலம் உருவாகி 25 ஆண்டுகள் ஆனதைக் குறிப்பிடும் வகையில் 25 தீர்மானங்களை பாஜக வெளியிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதை வெளியிட்டார்.

முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) அரசில் பெண்கள் மற்றும் பழங்குடியினருக்குப் பாதுகாப்பில்லை என அமித் ஷா விமர்சனம் வைத்தார். மாநிலத்தின் அடையாளத்தைக் காக்கத் தவறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

  • 21 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகளுடன் கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும்.

  • இளைஞர்களுக்கு உதவும் வகையில் இரு ஆண்டுகளுக்கு ரூ. 2,000 உதவித் தொகை வழங்கப்படும்.

  • 2.87 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

  • மகளிருக்கு மாதம் ரூ. 2,100 வழங்கப்படும். கூடுதலாக, தீபாவளி, ரக்‌ஷாபந்தனை முன்னிட்டு ஆண்டுக்கு இரு சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். ரூ. 500-க்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்.

  • பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். பழங்குடியின சமுதாயத்தினருக்கு இதில் விலக்கு அளிக்கப்படும்.

81 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்டுக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 என இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 23 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

முந்தைய சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 இடங்களிலும் பாஜக 25 இடங்களிலும் காங்கிரஸ் 16 இடங்களிலும் வெற்றி பெற்றன.