கோப்புப்படம் 
இந்தியா

வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 1,000: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் | Nitish Kumar | Bihar CM |

முன்பு 12 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது

கிழக்கு நியூஸ்

பிஹாரில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு இரு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 1,000 நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

இத்திட்டம் முன்பு 12 வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே நடைமுறையில் இருந்தது.

பிஹாரில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி 20 வயது முதல் 25 வயது வரையிலான இளைஞர்களைக் குறிவைக்கும் விதமாக முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்.

20 வயது முதல் 25 வயது வரையிலான பட்டதாரிகளில் மேற்கொண்டு எங்கும் படிப்பை மேற்கொள்ளாமல், வேலை தேடிக்கொண்டிருக்கும், சுய தொழில் எதுவும் செய்யாமல் இருக்கும், அரசு, தனியார் மற்றும் அரசு சாரா பணி எதிலும் இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு அதிகபட்சம் இரு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் என நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். இந்த நிதியுதவியை போட்டித் தேர்வுக்குத் தயாராகவும் அதற்குத் தேவையான பயிற்சிகளைப் பெறவும் இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் என நம்புவதாக நிதிஷ் குமார் எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலைகள் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறித்து உங்களுக்குத் தெரியும். வரும் நாள்களில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பல புதிய வேலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன. இந்த இலக்கை அடைய இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், அவர்களால் வேலைவாய்ப்பைப் பெற முடியும்.

பிஹார் இளைஞர்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதே மாநில அரசின் நோக்கம். கல்வி பெற்ற இளைஞர்கள் சுயசார்போடு, திறன்மிக்க மற்றும் வேலைமிக்கவர்களாக மாறும்போது, பிஹார் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களால் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்த முடியும்" என்று நிதிஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ள இந்தத் திட்டமானது, முன்பு 12 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கலை, அறிவியல் மற்றும் காமர்ஸ் துறையில் பட்டம் பெற்று வேலை இளைஞர்களுக்கே இது விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

Unemployed Youths | Nitish Kumar | Bihar CM | Financial Assistance |