கோப்புப்படம் 
இந்தியா

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால மனு தள்ளுபடி

கிழக்கு நியூஸ்

மருத்துவக் காரணங்களுக்காக 7 நாள்களுக்குப் பிணை வழங்கக்கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த இடைக்கால மனுவை தில்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்றம் பிரசாரம் மேற்கொள்வதற்காக 21 நாள்களுக்குப் பிணை வழங்கியது. இடைக்காலப் பிணைக் காலம் நிறைவடைந்ததையடுத்து, கடந்த 1-ம் தேதி திஹார் சிறையில் சரணடைந்தார் கெஜ்ரிவால். இதைத் தொடர்ந்து, ஜூன் 5 வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மருத்துவக் காரணங்களுக்காக 7 நாள்களுக்குப் பிணை வழங்கக்கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு நீதிமன்றத்தில் இடைக்கால மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தில்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இவருடைய நீதிமன்றக் காவல் ஜூன் 19 வரை நீட்டிக்கப்பட்டது.

மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.