கேரளத்தில் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் மாநில அரசு கையெழுத்திட்டுள்ளதைக் கண்டித்து அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டம் தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரள அரசு கையெழுத்திட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டத்துக்கு தமிழ்நாட்டில் இருக்கும் எதிர்ப்பைப் போல கேரளத்திலும் எதிர்ப்பு உள்ளது. இந்தியக் கல்வி அமைப்பில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தைப் புகுத்துவதே பிஎம்ஸ்ரீ திட்டத்தின் நோக்கம் என்பது மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் விமர்சனமாக உள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்து அமைச்சரவையிடம் ஒப்புதல் பெறவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. கேரள கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி இதுபற்றி விளக்கமளிக்கையில், மத்திய அரசின் கல்வி நிதிக்காக மட்டுமே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறினார். கேரள பாடத் திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்த நிலையில் தான் இடது ஜனநாயக முன்னணி அரசின் அமைச்சரவை புதன்கிழமை கூடுகிறது. கேரள அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் நான்கு பேர் இடம்பெற்றுள்ளார்கள். பிஎம்ஸ்ரீ திட்டம் தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது நிறைவேற்றப்படாத பட்சத்தில் நவம்பர் முதல் வாரம் வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணிக்கும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கவுன்சில் கூட்டம் நவம்பர் 4 அன்று நடைபெறுகிறது. நவம்பர் 4-க்குப் பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று இந்திய கம்யூன்ஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பினாய் விஸ்வம், கேரள இந்திய கம்யூனிஸ்ட் அமைச்சர்களான கே ராஜன், ஜி.ஆர். அனில், பி. பிரசாத் ஆகியோருடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார். ஆனால், இந்தக் கூட்டங்களில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பிய பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என பினாய் விஸ்வம் கூறினார்.
இதன்மூலம், புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் புறக்கணிக்கிறது. அமைச்சரவைக் கூட்டம் புறக்கணிப்பு மூலம் கேரள இடது ஜனநாயக முன்னணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது போல தெரிகிறது. ஆனால், கூட்டணியிலிருந்தபடியே போராடுவோம் என்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது.
A rift has emerged within the Kerala cabinet over the signing of the MoU for the Centre’s PM Shri scheme, with CPI ministers announcing that they will boycott cabinet meetings until the first week of November in protest.
CPI(M) | CPI | LDF | Kerala | PM Shri Scheme | MoU | Kerala Cabinet | CPI Ministers | LDF Government |