படம்: https://twitter.com/NIA_India
இந்தியா

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: இருவரைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ. 10 லட்சம் சன்மானம்

தகவல் கொடுப்பவர்களின் அடையாளம் ரகசியம் காக்கப்படும் என்றும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

கிழக்கு நியூஸ்

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் முசாவீர் ஹூசைன் மற்றும் அப்துல் மதீன் ஆகிய இருவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ. 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கி வரும் ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த வெள்ளிக்கிழமை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். குண்டுவெடிப்பு தொடர்புடைய வழக்கை என்ஐஏ கடந்த மார்ச் 3-ல் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த வழக்கில், ராமேஸ்வரம் கஃபேவுக்கு தொப்பி அணிந்து வந்த நபரைத் தேடி வந்தார்கள். இவரது புகைப்படங்கள் முதலில் வெளியிடப்பட்டன. இவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ. 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்தது.

இதையடுத்து, வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். பிறகு, தமிழ்நாட்டில் 5 இடங்கள் உள்பட மொத்தம் 18 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த குண்டுவெடிப்புக்கு சதித் திட்டம் தீட்டியது முசாவீர் ஷாஸீப் ஹூசைன் என்று என்ஐஏ கண்டறிந்தது. அப்துல் மதீன் தாஹா என்பவரும் இதற்கு சதித் திட்டம் தீட்டியதாக என்ஐஏ பிறகு கண்டறிந்தது. இருவரையும் என்ஐஏ தேடி வருகிறது.

தற்போது இவர்களது புகைப்படங்கள் மற்றும் அடையாளங்களை வெளியிட்டுள்ள என்ஐஏ, இவர்களைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ. 10 லட்சம் சன்மானம் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், தகவல் கொடுப்பவர்களின் அடையாளம் ரகசியம் காக்கப்படும் என்றும் என்ஐஏ தெரிவித்துள்ளது.