தேவகௌடா @H_D_Devegowda
இந்தியா

எங்கிருந்தாலும் உடனடியாக நாடு திரும்ப வேண்டும்: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தேவகௌடா எச்சரிக்கை

யோகேஷ் குமார்

என் மீது மரியாதை வைத்திருந்தால் உடனடியாக பிரஜ்வல் ரேவண்ணா திரும்பி வர வேண்டும் என தேவகௌடா கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அடுத்த நாளில், அவரின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் மகனுமான ரேவண்ணா மீதும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து கர்நாடக மாநில காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக பிரஜ்வல் ஜெர்மனிக்குச் சென்றதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்களில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா எங்கிருந்தாலும் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகௌடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“பிரஜ்வல் ரேவண்ணா குறித்து வெளியான தகவல்களை கேட்டதும் பேரதிர்ச்சிக்கு ஆளானேன். அதிலிருந்து மீண்டு வருவதற்கு சில நாட்கள் தேவைப்பட்டது. அவர் உண்மையாகவே தவறு செய்திருந்தால், கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் என்னையும், எனது குடும்பத்தினரையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்களை நான் தடுக்கவில்லை.

பிரஜ்வலை நான் பாதுகாப்பதாக நினைக்க வேண்டாம். அவர் வெளிநாடு சென்றதே எனக்கு தெரியாது. எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது. அவருக்கு தான் அனைத்து உண்மைகளும் தெரியும். ரேவண்ணாவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கிறேன். அவர் எங்கிருந்தாலும் உடனடியாக திரும்பி காவல்துறையினரிடம் சரணடைய வேண்டும். இதனை எச்சரிக்கையாக சொல்கிறேன். என் மீது மரியாதை வைத்திருந்தால் உடனடியாக அவர் திரும்பிவர வேண்டும். பிரஜ்வல் மீது நடைபெறும் சட்ட ரீதியான விசாரணையில் நானோ, என்னுடைய குடும்பத்தினரோ தலையிடமாட்டோம். மக்களின் நம்பிக்கையை திரும்ப பெறுவது மிகவும் முக்கியம். நான் உயிரோடு இருக்கும் வரை, நான் அவர்களை கண்டிப்பாக கைவிட மாட்டேன்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.