பிரஜ்வல் ரேவண்ணா கைது 
இந்தியா

பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணா கைது

யோகேஷ் குமார்

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒரு மாதத்துக்கு மேல் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா, இன்று பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து கர்நாடக மாநில காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

முன்னதாக பிரஜ்வல் ஜெர்மனிக்குச் சென்றதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்களில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா எங்கிருந்தாலும் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகௌடா எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து ரேவண்ணா மே 31-ல் சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராகவுள்ளதாகக் காணொளி மூலம் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் இன்று நள்ளிரவில் பெங்களூரு திரும்பினார் ரேவண்ணா. கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை சிறப்பு விசாரணைக் குழு கைது செய்துள்ளானர்.