தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் அசுத்தமான கழிவறையைப் படம் பிடித்து அனுப்பினால், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் ரூ. 1,000 வழங்கப்படும்.
இந்தத் தொகை ஃபாஸ்டேக் கணக்கில் மட்டுமே நேரடியாகச் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் 'கிளீன் டாய்லெட் பிக்சர் சேலஞ்ச்' எனும் முன்னெடுப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 31, 2025 வரை இது நடைமுறையில் இருக்கவுள்ளது. இந்த முன்னெடுப்பின் கீழ், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் சுங்கச் சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளில் அசுத்தமாக இருக்கும் கழிவறைகள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கவனத்துக்குச் செல்லவுள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோர், கழிவறைகள் அசுத்தமாக இருப்பதைக் கண்டறிந்தால், அதை உடனடியாகப் படம்பிடித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதில் பங்கேற்று தகவலை எப்படி தெரிப்பது?
ராஜ்மார்க் யாத்திரா (RajmargYatra) செயலின் சமீபத்திய வடிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்கச் சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளில் அசுத்தமான கழிவறையைப் புகைப்படம் எடுக்க வேண்டும்.
நேரம் குறிப்பிடப்பட்ட, இடம் இணைக்கப்பட்ட, தெளிவான புகைப்படத்தை எடுக்க வேண்டும்.
புகைப்படத்தை பெயர், மொபைல் எண் மற்றும் வாகன பதிவெண் உள்ளிட்ட தரவுகளுடன் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இது சரிபார்க்கப்பட்ட பிறகு, வாகனப் பதிவெண்ணில் இணைக்கப்பட்டுள்ள ஃபாஸ்டேக் கணக்கில் ரூ. 1,000 செலுத்தப்படும்.
கட்டுப்பாடு மற்றும் நிபந்தனைகள்
ஒரு வாகனப் பதிவெண் கொண்ட கணக்குக்கு ஒரு முறை மட்டுமே ரூ. 1,000 வழங்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் கட்டப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் கழிவறைகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.
ஒரு கழிவறைக்கு ஒரு நாளைக்கு ஒரு பரிசுத்தொகை மட்டுமே வழங்கப்படும். முதலில் தகவல் தெரிவிக்கும் நபருக்கு மட்டுமே அது வழங்கப்படும்.
பெட்ரோல் பங்க், தாபா உள்ளிட்ட தனியாருக்குச் சொந்தமான கழிவறைகள் கணக்கில் கொள்ளப்படாது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் செலுத்தப்படும் இந்த ஆயிரம் ரூபாயை, வேறு கணக்குக்கு மாற்ற முடியாது, பணமாக எடுக்க முடியாது.
NHAI | National Highways Authority of India | Dirty Toilets |