இந்தியா

12வது வகுப்புப் பாடபுத்தகத்தில் பாபர் மசூதி சர்ச்சை: என்.சி.ஆர்.டி இயக்குநர் விளக்கம்!

பொருத்தமற்ற விஷயங்கள் மாற்றப்பட வேண்டும். ஏன் அவை மாற்றப்படக்கூடாது? இதைக் காவிமயமாக்கலாக நான் பார்க்கவில்லை.

ராம் அப்பண்ணசாமி

பன்னிரெண்டாம் வகுப்பு என்.சி.ஆர்.டி பாட புத்தகத்தில் பாபர் மசூதி இடிப்பு குறித்த தகவல் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

புதிய திருத்தத்துடன் வெளியாகியுள்ள 12வது வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் `பாபர் மசூதி’ என்ற பெயர் மாற்றப்பட்டு அதற்கு பதில், டிசம்பர் 6, 1992-ல் இடிக்கப்பட்ட `மூன்று குவிமாடக் கட்டடம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலைத் தொடர்ந்து, `ராம ஜென்ம பூமி கோவில் இயக்கம் பற்றியும், உச்ச நீதிமன்ற அரசியல் அமர்வின் தீர்ப்பை முன்வைத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது பற்றியும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் குறித்துப் பேட்டியளித்துள்ள என்.சி.ஆர்.டி இயக்குநர் தினேஷ் சக்லானி, `அதை (பாபர் மசூதியை) எப்படிக் குறிப்பிடப்பட வேண்டும் என்று நிபுணர்கள் முடிவுசெய்தனர், இந்த விஷயத்தில் எனக்கு எந்தவித சம்மந்தமும் இல்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்து நடந்த சமீபத்திய மாற்றங்களை குறிப்பிடும் வகையில் பாடபுத்தகத்தில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றார்.

இது குறித்து மேலும் பேசிய சக்லானி, `மாற்றம் மேற்கொள்ளப்பட்ட என்.சி.ஆர்.டி புத்தகம் மிகவும் சிறியது. மாணவர்கள் அல்லது வேறு யாராவது இந்தத் தலைப்பு குறித்து ஆராய விரும்பினால் எங்கிருந்து வேண்டுமானாலும் அது குறித்துப் படித்துக்கொள்ளலாம். ஆராய்ந்து படிக்கும் அளவுக்கு ஆர்வமுடைய யாரையும் நாம் தடுத்து நிறுத்த முடியாது’ என்றார்.

இந்த மாற்றங்கள் கல்வி காவிமயமாக்கப்படுவதன் வெளிப்பாடு என்ற குற்றச்சாட்டு குறித்துக் கேட்கப்பட்டதுக்கு, `பொருத்தமற்ற விஷயங்கள் மாற்றப்பட வேண்டும். ஏன் அவை மாற்றப்படக்கூடாது? இதைக் காவிமயமாக்கலாக நான் பார்க்கவில்லை. வரலாறு கற்பிக்கப்படுவது மாணவர்கள் தகவல் தெரிந்துகொள்ளத்தான், அதைப் போர்க்களமாக்குவதற்கு அல்ல’ என்றார் சக்லானி.

மேலும் 11வது வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் கோத்ரா கலவரத்துக்குப் பிறகு இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டது குறித்த தகவல் நீக்கப்பட்டுள்ளது.