இந்தியா

தெரு நாய்கள் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவு திருத்தியமைப்பு! | Stray Dogs | Supreme Court

தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பது அனுமதிக்கப்படாது, மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ராம் அப்பண்ணசாமி

தேசிய அளவில் விவாதத்தைக் கிளப்பிய கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிடப்பட்ட தெருநாய்கள் குறித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று (ஆக. 22) திருத்தியமைத்துள்ளது.

தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்கத்திற்குப் பிறகு சம்மந்தப்பட்ட தெருநாய்களை அவை வசித்து வந்த அதே பகுதிகளில் விடுவிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதேநேரம், ரேபிஸ் பாதிப்பு அல்லது ஆக்ரோஷமான நடத்தைகொண்ட நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு அவை பிரித்யேக காப்பகங்களில் வைக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

`தெருநாய்களை விடுவிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நிறுத்திவைக்கப்படுகிறது. அவற்றுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி செலுத்தப்பட்டு, அதே பகுதிகளில் விடுவிக்கவேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், இந்த வழக்கை விரிவாக விசாரித்த பிறகு ஒரு தேசிய கொள்கையை வகுப்பதாக நீதிமன்றம் கூறியது.

நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி சந்தீப் மேத்தா மற்றும் நீதிபதி என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் இந்த மாற்றங்களை மேற்கொண்டு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் கண்டிப்பு

தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பது அனுமதிக்கப்படாது என்றும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு கண்டிப்பான முறையில் கூறியது.

அத்துடன், இந்த விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்தை அணுகும் எந்தவொரு செல்லப்பிராணி பிரியரோ அல்லது அரசு சாரா அமைப்போ, தங்களது மனுவை விசாரிக்க முறையே ரூ. 25,000 மற்றும் ரூ. 2 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்தவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆகஸ்ட் 8 - உச்ச நீதிமன்ற உத்தரவு

தில்லி-என்.சி.ஆர். பகுதியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து, அவற்றை பிரத்யேகமான காப்பகங்களில் அடைத்து வைக்கவேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீதிபதி பர்திவாலா தலைமையிலான அமர்வு ஆகஸ்ட் 8 அன்று உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த உத்தரவு தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறிய நிலையில், மிக அரிய நடவடிக்கையாக இந்த வழக்கின் விசாரணையை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு தலைமை நீதிபதி மாற்றி உத்தரவிட்டார்.