படம்: https://twitter.com/NIA_India
இந்தியா

ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு: தேடப்பட்டு வரும் நபரின் புதிய படங்கள் வெளியீடு

இவரைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ. 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் என்ஐஏ அறிவித்துள்ளது.

கிழக்கு நியூஸ்

ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்புடைய நபரின் புதிய சிசிடிவி காட்சிகள் மற்றும் படங்களை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வெளியிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், ஒயிட்ஃபீல்ட் பகுதியிலுள்ள ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். இந்த வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தொப்பி அணிந்து ராமேஸ்வரம் கஃபேவுக்கு வந்த நபர் தேடப்பட்டு வருகிறார். வரும்போது பையுடன் வந்த இவர், ராமேஸ்வரம் கஃபேயில் பையை வைத்துச் சென்றுள்ளார். இதிலிருந்துதான் வெடிகுண்டு வெடித்துள்ளது. இவர் கஃபேவுக்கு வந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டன. மேலும், இவரைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ. 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் என்ஐஏ அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் பேருந்தினுள் இருக்கை மாற்றி அமரும் சிசிடிவி காட்சி மற்றும் பேருந்து நிறுத்தத்தில் இவர் உலா வரும் காட்சிகளை என்ஐஏ வெளியிட்டது. இவரது முகம் நன்றாகத் தெரியும் வகையில் நான்கு புகைப்படங்களையும் என்ஐஏ வெளியிட்டுள்ளது. எனினும், தேடப்பட்டு வரும் அந்த நபர் அனைத்துப் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களில் முகக் கவசம் அணிந்துள்ளார்.