ராமேஸ்வரம் கஃபே  
இந்தியா

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: மேற்கு வங்கத்தில் இருவர் கைது!

இருவரும் தவறான அடையாளங்களைப் பயன்படுத்தி கொல்கத்தாவில் மறைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

யோகேஷ் குமார்

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவந்த முசாவீர் ஹூசைன் ஷாஸீப் மற்றும் அப்துல் மதீன் தாஹா ஆகிய இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள ராமேஸ்வரம் கஃபேவில் மார்ச் 1-ல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வந்த நிலையில் இது தொடர்பாக தமிழ்நாட்டில் 5 இடங்களில் சோதனை நடைபெற்றது.

ஏற்கெனவே ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக ஷபீர் என்பவர் கர்நாடகத்தில் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து இந்த குண்டுவெடிப்புக்கு சதித் திட்டம் தீட்டியது முசாவீர் ஹூசைன் ஷாஸீப் மற்றும் அப்துல் மதீன் தாஹா என என்ஐஏ கண்டறிந்தது.

இந்நிலையில் இருவரையும் என்ஐஏ தேடி வந்த நிலையில், கொல்கத்தாவில் இன்று அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் தவறான அடையாளங்களைப் பயன்படுத்தி கொல்கத்தாவில் மறைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.