ANI
ANI
இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல்: குடியரசுத் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

கிழக்கு நியூஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒரே வாக்காளர் பட்டியல் மற்றும் ஒரே வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்த வேண்டும் என ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.

நாடு முழுக்க நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும், உள்ளாட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்தாண்டு செப்டம்பரில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதிக் குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவை முன்னாள் செயலர் சுபாஷ் காஷ்யப் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் சிறப்பு அழைப்பாளராக குழுவில் இணைக்கப்பட்டார்.

மக்களவை காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி இந்தக் குழுவிலிருந்து விலகினார்.

ராம்நாத் கோவிந்த் தலைமையிலான இந்தக் குழு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கான பரிந்துரைகள் அடங்கிய 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்தப் பரிந்துரைகளின்படி, முதற்கட்டமாக மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதைத் தொடர்ந்து 100 நாள்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஒருவேளை தொங்கு சட்டப்பேரவை அமைந்தாலோ, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாலோ மீதமுள்ள 5 ஆண்டுகளுக்குப் புதிதாக தேர்தல் நடத்தப்படும். புதிதாக நடத்தப்படும் தேர்தல் மூலம் சட்டப்பேரவை அமையும் பட்சத்தில், ஒருவேளை இது முன்கூட்டியே கலைக்கப்படாமல் இருந்தால், இந்தச் சட்டப்பேரவையானது மக்களவைக்கான காலம் முடியும் வரை இயங்கும்.

இதற்காக அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 83 (நாடாளுமன்ற அவைகளின் கால அட்டவணை) மற்றும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 172-ல் (மாநில சட்டப்பேரவைகளின் கால அட்டவணை) திருத்தம் மேற்கொள்ள வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை.