அயோத்தி கோயில்
அயோத்தி கோயில் ANI
இந்தியா

அயோத்தி: இன்று முதல் சிறப்பு பூஜைகள் ஆரம்பம்

ஜெ. ராம்கி

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான இறுதிக்கட்ட சடங்குகள் நேற்று (ஜன. 19) தொடங்கின. நாளை வரை தொடர்ந்து நடைபெறும் பூஜையின் முக்கிய நிகழ்வான ராம் லல்லாவின் சிலை, இன்று கோயில் வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. முன்னதாக ராம் லல்லாவின் சிலைக்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவிருக்கிறது.

இன்று, ராம் லல்லாவின் சிலை முதல் முறையாகக் கோயில் வளாகத்திற்குக் கொண்டு வரப்படுகிறது. 200 கிலோ எடையுள்ள கருங்கல் சிலையானது, பூக்களால் அலங்கரிப்பட்ட வண்டியில் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

சரயு நதியிலிருந்து கொண்டு வரப்படும் புனித நீரைக் கலசங்களில் ஏந்தியபடி பக்தர்களும் கூடவே ஊர்வலமாக வருவார்கள். கர்நாடகாவின் மைசூரைச் சேர்ந்த சிற்பியான அருண் யோகிராஜ் உருவாக்கத்தில் கருங்கல்லில் செதுக்கப்பட்ட ராம லல்லா சிலையானது கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது.

ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, ராம் லல்லா சிலைக்குக் கோயில் வளாகத்தில் தீர்த்த பூஜை, வர்தினி பூஜை, காலஷ்யத்ரா உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட இருக்கின்றன. பின்னர் சிலையானது கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது. அடுத்து வரும் 6 நாள்களும் பல்வேறு சடங்குகள் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.