பிஹார் சிறப்பு தீவிர திருத்தம், மக்களவை வாக்கு திருட்டு குற்றச்சாட்டு ஆகியவற்றை முன்வைத்து நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணையத்தை நோக்கிப் பேரணியாக செல்ல முயன்ற இண்டியா எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2024 மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்குத் திருட்டில் பாஜக ஈடுபட்டதாக கடந்த வாரம் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு தரவுகளுடன் குற்றம்சாட்டினார். இதற்கிடையே பிஹார் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த இரு விவகாரங்களையும் முன்வைத்து இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி இன்று (ஆக. 11) பேரணி நடத்தின.
இதில் மல்லிகார்ஜுன் கார்கே, சரத் பவார், பிரியங்கா காந்தி, கனிமொழி, மஹுவா மொய்த்ரா, அகிலேஷ் யாதவ், டி. ஆர். பாலு, திருச்சி சிவா, சு. வெங்கடேசன் உள்ளிட்ட எதிர்க்கட்சி இண்டியா கூட்டணியைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தை நோக்கிச் செல்லும் பாதையில் தில்லி காவல் துறையினர் தடுப்புகளை அமைத்திருந்தனர். முன்னேறிச் செல்ல தங்களை அனுமதிக்கும்படி காவல்துறையினருடன் எம்.பி.க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தங்களை அனுமதிக்காத காவல்துறையைக் கண்டித்து சாலையில் அமர்ந்து எம்.பி.க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எம்.பி.க்கள் தடுப்புகளைத் தாண்டிக் குதித்து தேர்தல் ஆணையத்தை நோக்கிச் செல்ல முயன்றனர்.
இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் பலரும் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் ஏற்றப்பட்டனர். பேருந்தில் இருந்தபடி செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி பேசியதாவது,
`அவர்களால் பேச முடியாது என்பதுதான் உண்மை. நாட்டிற்கு முன்பு உண்மை உள்ளது. இந்தப் போராட்டம் அரசியல் சார்ந்தது அல்ல. அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்காகவே இந்தப் போராட்டம். ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு என்பதற்காகவே இந்தப் போராட்டம். தூய்மையான வாக்காளர் பட்டியல் என்பதே எங்களின் கோரிக்கை’ என்றார்.