இந்தியா

பாஜக எம்.பி.க்கள் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு!

இதை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இது அரசியலமைப்பு சட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.

ராம் அப்பண்ணசாமி

ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில், கர்நாடகத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட விவகாரத்தை முன்வைத்து பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, மாநிலங்களவை இன்று (மார்ச் 24) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த மார்ச் 10 அன்று தொடங்கியது. அமர்வின் 10-ம் நாளான இன்று காலை 11 மணிக்கு, சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியது. அப்போது சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால் திட்டமிட்டபடி கேள்வி நேரத்தை நடத்த முடியாத காரணத்தால் நண்பகல் 12 மணி வரை மக்களவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

அதேபோல, காலை 11 மணிக்கு தலைவர் ஜெக்தீப் தன்கர் தலைமையில் மாநிலங்களவை கூடியதும், கர்நாடக அரசால் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பினார் மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜு. மாநிலங்களவையில் அவர் கூறியதாவது,

`இன்றைய நேரமில்லா நேரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நான் எழுந்து நிற்பதற்கு காரணம் உள்ளது. மிகவும் தீவிரமான மற்றும் முக்கியமான ஒரு விஷயம் குறித்து இன்று காலை தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் என்னை சந்தித்தார்கள்.

அரசியலமைப்புப் பதவியில் இருக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர், ஒப்பந்தப் பணிகளில் இஸ்லாமிய சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவர்கள் (காங்கிரஸ்) மாற்றப்போவதாகப் பேசியுள்ளார்.  இதை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

இது அரசியலமைப்பு சட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இந்த விவகாரம் தொடர்பாக இங்கு அமர்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே விளக்கம் அளிக்கவேண்டும்’ என்றார்.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்துப் பேசிய பாஜக தேசியத் தலைவரும், மத்திய சுகாதார அமைச்சருமான ஜெ.பி. நட்டா, ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையிலான சட்டமசோதா கர்நாடக மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை கண்டித்து தொடர்ச்சியாக பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவையை ஒத்திவைத்தார் ஜெக்தீப் தன்கர்.