மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (கோப்புப்படம்) 
இந்தியா

தில்லி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் | Rajnath Singh |

நாட்டின் முன்னணி புலனாய்வு அமைப்புகள் தில்லி சம்பவத்தை விசாரித்து வருகின்றன...

கிழக்கு நியூஸ்

தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க முடியாது அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தில்லி பாதுகாப்பு உரையாடல் என்ற நிகழ்ச்சி மனோஹர் பாரிக்கர் பாதுகாப்பு கல்வி மையத்தில் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

“தில்லியில் கார் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என் இதயப்பூர்வ அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு வலிமையும் மன தைரியமும் கொடுக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

தில்லி சம்பவத்தில் நம் நாட்டின் முன்னணி புலனாய்வு அமைப்புகள் விசாரணையில் இறங்கியுள்ளன. அவை முழுமையான ஆய்வை நிகழ்த்தி விரைவில் பொது வெளிக்கு உண்மைகளைத் தெரியப்படுத்துவார்கள். இந்தச் சம்பவத்தில் தொடர்புள்ள அனைவரும் நீதிக்கு முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் தப்பிக்க முடியாது.

பாதுகாப்புத் துறையில் கண்ணுக்குத் தெரியாத பல முன்னேற்றங்கள் நாள்தோறும் நடந்து வருகின்றன. தரவுகளின் பாதுகாப்பு, இணைப்புகளின் மறைகுறியாக்கம், தானியங்கி நிர்வாக அமைப்புகள் உள்ளிட்ட பல துறைகளில் இன்று பாதுகாப்புத்துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. புதிய போர் விமானம், ஏவுகணை போல் இவை மக்களின் கவனத்தைக் கவராதவை. ஆனாலும் சரியான நேரத்தில் சரியான இடத்தில் தகுந்த கருவிகளைப் பயன்படுத்த இவை உதவுகின்றன.

இந்தியாவின் பாதை தெளிவாக உள்ளது. உலக நாடுகளின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் இருந்து, நாம் தொழில்நுட்பத் தலைமைத்துவத்திற்கு முன்னேற வேண்டும். நம் பலம் ஒரு நிறுவனத்தை மட்டும் சார்ந்து கிடையாது. நமது ஒட்டுமொத்த சூழலைச் சார்ந்தது. திறமை, திட்டம் மற்றும் ஒத்துழைப்பு சார்ந்தது.

தொழில்நுட்பம் என்பது ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைப் பொறுத்தது மட்டுமல்ல. அவை இயங்கும் அமைப்புகளைச் சீராகவும் துரிதமாகவும் செயல்படுத்தப் பயன்படுபவை. அதன் முன்னேற்றத்தில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.” என்றார்.

Defence Minister Rajnath Singh has stated that those involved in the Delhi car blast incident will not escape and will be brought before justice.