ஐநா பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் துணைத் தலைமையாக பாகிஸ்தானை நியமித்த ஐக்கிய நாடுகள் சபையின் முடிவு அதிர்ச்சியூட்டும் வகையில் மட்டுமல்லாமல் முரண்பாடாகவும் இருப்பதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களை பெருமைப்படுத்துவதில் பாகிஸ்தானின் நீண்டகால சாதனையை உலகம் அறிந்திருக்கும் வேளையில், இந்த செயல் பாலை பூனை பாதுகாப்பது போன்றது என கடுமையான முறையில் விமர்சனங்களை ராஜ்நாத் சிங் முன்வைத்துள்ளார்.
உத்தரகண்ட் மாநில தலைநகர் டேராடூனில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு ராஜ்நாத் சிங் பேசியதாவது,
`ஒரு பயங்கரவாதி, வேறொரு நபரின் சுதந்திரப் போராட்ட வீரராக இருக்க முடியும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. 2016-ல் இஸ்லாமாபாத்தில் நடந்த சார்க் உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இதை நான் தெளிவாகக் கூறியிருந்தேன்.
அப்போது பாகிஸ்தானின் ஒரு பகுதியினர் சுதந்திரப் போராட்டம் என்ற பெயரில் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முயன்றனர். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நேரத்தில்தான் சுதந்திரம் பெற்றன. இன்று, உலகளவில் இந்தியா `ஜனநாயகத்தின் தாய்’ என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அதேநேரத்தில் `உலகளாவிய பயங்கரவாதத்தின் தந்தை’ என்று பாகிஸ்தான் புகழ் பெற்றுள்ளது.
9/11 (அமெரிக்க இரட்டை கோபுர) தாக்குதலுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் துணைத் தலைமையாக பாகிஸ்தானை நியமித்தது மிகச் சமீபத்திய உதாரணம். அந்த தாக்குதல் யாரால் திட்டமிட்டப்பட்டது என்பதும், அதற்கு மூளையாக செயல்பட்டவர் எங்கே கண்டுபிடிக்கப்பட்டார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
பாகிஸ்தான் அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. இத்தகைய நியமனம் ஐநாவின் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளின் நம்பகத்தன்மையை கடுமையாக குறைத்து மதிப்பிடும் செயலாகும்’ என்றார்.