ராஜீவ் பிரதாப் ரூடி - கோப்புப்படம் ANI
இந்தியா

பாஜக Vs பாஜக: தேர்தலில் வென்ற ராஜீவ் பிரதாப் ரூடி! | Rajiv Pratap Rudy | BJP | Constitution Club

ஐந்தாவது முறையாக மக்களவை எம்.பி.யாக இருக்கும், கான்ஸ்டிடியூஷன் கிளப்பின் தற்போது செயலாளரான (நிர்வாகம்) ரூடி மீண்டும் அப்பதவிக்குப் போட்டியிட்டார்.

ராம் அப்பண்ணசாமி

கான்ஸ்டிடியூஷன் கிளப் நிர்வாகத்தில் தனது 25 ஆண்டுகால ஆதிக்கத்தை பாஜக தலைவரும், எம்.பி.யுமான ராஜீவ் பிரதாப் ரூடி, தேர்தலில் வென்று மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்த தேர்தலில், தனது சொந்த கட்சியைச் சேர்ந்த சஞ்சீவ் பால்யானுடன் போட்டியிட்டு ரூடி வெற்றிபெற்றுள்ளார். இந்தத் தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி உள்ளிட்ட நாட்டின் பல உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.

தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் உள்ளிட்ட 1,295 பேரை உறுப்பினர்களாகக்கொண்ட கான்ஸ்டிடியூஷன் கிளப்பின் செயலாளர் (நிர்வாகம்) பதவிக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் 680-க்கும் மேற்பட்ட செல்லுபடியாகும் வாக்குகள் பதிவாகின என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

ஐந்தாவது முறையாக மக்களவை எம்.பி.யாக இருக்கும், கான்ஸ்டிடியூஷன் கிளப்பின் தற்போது செயலாளரான (நிர்வாகம்) ரூடி மீண்டும் அப்பதவிக்குப் போட்டியிட்டார். இரு முறை முன்னாள் மக்களவை எம்.பி.யாகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்த சஞ்சீவ் பால்யான் ரூடியை எதிர்த்துப் போட்டியிட்டார்.

இரண்டு போட்டியாளர்களும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் இந்தத் தேர்தலை முன்வைத்துப் பாஜக vs பாஜக என்ற தோற்றம் உருவானது.

25 ஆண்டுகளாக கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் ரூடிக்கு இருக்கும் ஆதிக்கம் காரணமாக அவருக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். அதேநேரம், பாஜக உறுப்பினர்கள் வாக்குகள் இரண்டாகப் பிரிந்ததாலும் இந்த தேர்தலில் ரூடி வெற்றி பெற்றுள்ளார்.

குறிப்பாக, வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 100-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் ரூடி வெற்றிபெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.