கோப்புப்படம் ANI
இந்தியா

குடும்பச் சொத்தைக் காப்பாற்ற வாரிசுரிமை வரியை நீக்கினார் ராஜீவ் காந்தி: பிரதமர் மோடி

கிழக்கு நியூஸ்

இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்படவிருந்த சொத்துகளைக் காப்பாற்ற வாரிசுரிமை வரிச் சட்டத்தை ராஜீவ் காந்தி நீக்கியதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனாவில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

"வாரிசுரிமை வரிச் சட்டம் தொடர்புடைய உண்மைகள் பல விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மறைந்தபோது, அவருடைய வாரிசுகளுக்குச் சொத்துகள் சென்றன. ஆனால், சொத்துகள் வாரிசுகளைச் சென்றடையும் முன், அவற்றின் சில பகுதிகளை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் வகையில் முன்பு ஒரு சட்டம் இருந்தது.

இந்தச் சட்டத்தை காங்கிரஸ்தான் வகுத்தது. சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி வாரிசுரிமை வரிச் சட்ட நடைமுறையை ரத்து செய்தார். நான்கு தலைமுறைகளாக சொத்து சேர்த்த பிறகு, தற்போது உங்களுடைய சொத்துகளைக் கொள்ளையடிக்க விரும்புகிறார்கள்" என்றார் பிரதமர் மோடி.

முன்னதாக, அயலக காங்கிரஸ் தலைவர் சாம் பித்ரோடா அமெரிக்காவில் சில மாகாணங்களில் நடைமுறையில் இருக்கும் வாரிசுரிமை வரி குறித்து அமெரிக்காவில் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். இவரது கருத்தைக் கொண்டு பாஜகவினர் காங்கிரஸை விமர்சிக்கத் தொடங்கினார்கள்.

எனினும், சாம் பித்ரோடாவின் கருத்துக்கும் காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.