இந்தியா

ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 6 பேர் உயிரிழப்பு | Rajasthan |

மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பரவியதாகத் தகவல்...

கிழக்கு நியூஸ்

ராஜஸ்தானில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 நோயாளிகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று (அக். 5) திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் காயம் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 நோயாளிகள் தீயில் சிக்கினார்கள். அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து மீட்டனர். ஆனாலும் 2 பேர் பெண்கள், 4 பேர் ஆண்கள் என 6 நோயாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். மேலும் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

அவசர சிகிச்சைப் பிரிவின் மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பற்றியதாகவும், அதன் பிறகு ரசாயன வாயு கசிந்ததே உயிரிழப்புகளுக்குக் காரணம் என மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து, உயிரிழப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மா, விபத்து குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதனடிப்படையில், மருத்துவத் துறையைச் சேர்ந்த 6 அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, மருத்துவமனையில் உள்ள தீயணைப்பு வசதிகள், அதிர்ச்சி சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க மருத்துவமனை நிர்வாகம் கொண்ட நடவடிக்கை, உயிரிழந்தோரின் குடும்பத்தினர் ஆகிய இடங்களில் விசாரணை நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் உரிய உபகரணங்கள் இல்லாததாலும் ஊழியர்களின் கவனக்குறைவாலும்தான் தீ விபத்து ஏற்பட்டது எனக் குற்றம்சாட்டி, உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.