கோப்புப்படம் 
இந்தியா

ரயில்வே துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை: மமதா பானர்ஜி குற்றச்சாட்டு

கிழக்கு நியூஸ்

ரயில்வே துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்றும், இதில் பல பிரச்னை இருப்பதாகவும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

கஞ்சஞ்ஜங்கா விரைவு ரயில் திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவிலிருந்து சியல்டா (கொல்கத்தா) நோக்கி சென்றுகொண்டிருந்தது. மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே ரங்காபானி என்ற இடத்தில் கஞ்சஞ்ஜங்கா விரைவு சென்றுகொண்டிருந்தது. அப்போது, பின்னால் வந்த சரக்கு ரயில் கஞ்சஞ்ஜங்கா விரைவு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கஞ்சஞ்ஜங்கா விரைவு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பலர் காயமடைந்துள்ளார்கள்.

விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"விபத்து குறித்து காலை 9 மணிக்கு எனக்குத் தகவல் கிடைத்தது. அப்போதிலிருந்து தலைமைச் செயலர் மற்றும் மற்ற அதிகாரிகள் மூலமாக நிலைமையை நிர்வகித்து வருகிறேன். காயமடைந்தவர்களுக்கு உதவவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் மருத்துவ வாகனங்கள், பேரிடர் மீட்புக் குழுவினர், மருத்துவர்களை அனுப்பிவைத்தேன். காயமடைந்தவர்களைப் பார்ப்பதற்காக இங்கு வந்துள்ளேன். இங்குள்ள பெரும்பாலானோரிடம் உரையாடினேன்.

நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, 2-3 பெரிய ரயில் விபத்துகளைப் பார்த்துள்ளேன். இதன்பிறகு, ரயில்கள் மோதாமல் இருப்பதற்கான கருவியைத் தயாரித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தேன். இதன்பிறகு, ரயில்கள் மோதிக்கொள்ளும் விபத்துகள் நடக்கவில்லை. ஆனால், இன்றைக்கு ரயில்வே துறையில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. ரயில்வே அமைச்சகத்தில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன.

ரயில்வே துறைக்கென தாக்கல் செய்யப்பட்டு வந்த பிரத்யேக நிதிநிலை அறிக்கை நிறுத்தப்பட்டது. இந்தத் துறைக்குப் போதிய முக்கியத்துவம் கிடைப்பதில்லை. ரயில்வே பற்றி எனக்குத் தெரியாதது எதுவும் இல்லை. புதிதாக எதுவுமே செய்யப்படவில்லை. புதிய மெட்ரோ மற்றும் ரயில் நிலையங்கள், என்னுடைய காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் வந்தவை.

நான் நிறைய விஷயங்களைத் தொடங்கினேன். ஆனால், இவர்கள் வந்தே பாரத் ரயில்களைக் கொண்டு வெறும் விளம்பரங்களைத் தேடிக்கொள்கிறார்கள். துரந்தோ விரைவு ரயில் எங்கே?. ராஜ்தானி விரைவு ரயிலுக்குப் பிறகு துரந்தோ ரயில்தான் அதிவேகமான ரயில். இன்று ஒட்டுமொத்த ரயில்வே துறையும் அலட்சியத்தைச் சந்தித்து வருகிறது. ரயில்வே அமைச்சகம் முறையாகக் கவனிக்கப்பட வேண்டும்" என்றார் மமதா பானர்ஜி.