ராகுல் காந்தி ANI
இந்தியா

அம்பானி, அதானி வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்புங்கள்: ராகுல் காந்தி

யோகேஷ் குமார்

அம்பானி மற்றும் அதானிக்கு மோடி எவ்வளவு பணம் கொடுத்தாரோ, அதே அளவு பணத்தை இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்கு நாங்கள் கொடுப்போம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

தெலங்கானாவின் கரிம்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் அம்பானி, அதானியை விமர்சிப்பதில் மௌனம் காப்பது ஏன் என காங்கிரஸை நோக்கி பிரதமர் மோடி கேள்வியெழுப்பினார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் ராகுல் காந்தி, “பொதுவாக பூட்டிய அறைகளில் தான் அதானி மற்றும் அம்பானியைப் பற்றி பேசுவீர்கள். பொதுவெளியில் அதானி மற்றும் அம்பானி பற்றி நீங்கள் பேசுவது இதுவே முதல்முறை” எனக் கூறி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராகுல் காந்தி பேசியதாவது: “பயப்படுகிறீர்களா மோடி? பொதுவாக பூட்டிய அறைகளில் தான் அதானி மற்றும் அம்பானியைப் பற்றி பேசுவீர்கள். பொதுவெளியில் அதானி மற்றும் அம்பானி பற்றி நீங்கள் பேசுவது இதுவே முதல்முறை. அவர்கள் காங்கிரஸுக்கு டெம்போக்களில் பணம் தருகிறார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும். உங்களுக்கு இதில் தனிப்பட்ட அனுபவம் எதுவும் இருக்கிறதா? அதானியும், அம்பானியும் காங்கிரஸுக்கு பணம் அனுப்பினார்களா? என்பதை விசாரிக்க அவர்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்புங்கள். அம்பானி மற்றும் அதானிக்கு மோடி எவ்வளவு பணம் கொடுத்தாரோ, அதே அளவு பணத்தை இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்கு நாங்கள் கொடுப்போம். பாஜகவின் ஊழலின் உதவியாளர் யார் என்பது நாட்டுக்கே தெரியும்” என்றார்.