கோப்புப்படம் ANI
இந்தியா

ராகுல் காந்தியின் ராஜினாமா ஏற்பு: மக்களவைச் செயலகம்

கிழக்கு நியூஸ்

வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ள நிலையில், மக்களவைத் தலைவர் இதை ஏற்றுக்கொண்டதாக மக்களவைச் செயலகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ராய் பரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு, இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். 14 நாள்களில் ஏதேனும் ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது விதி.

இதன்படி, எதிர்பார்த்ததைப்போல வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி நேற்று அறிவித்தார். வயநாடு எம்.பி. பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ள நிலையில், இவரது ராஜினாமாவை மக்களவைத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இதுதொடர்புடைய அறிவிக்கையை மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ளது.

இதன் நகர் தேர்தல் ஆணையம் மற்றும் கேரள மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் உள்ளிட்டோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளதன் மூலம், அங்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் நேற்று கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து அறிவித்தார்கள். வயநாட்டில் போட்டியிடுவதன் மூலம் முதன்முறையாக தேர்தல் அரசியலில் களமிறங்குகிறார் பிரியங்கா காந்தி.