கோப்புப்படம் ANI
இந்தியா

ஆபாசக் காணொளி விவகாரம்: கர்நாடக முதல்வருக்கு ராகுல் காந்தி கடிதம்

கிழக்கு நியூஸ்

ஆபாசக் காணொளி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருக்குமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவெகௌடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாசக் காணொளி விவகாரம் கர்நாடகத்தில் பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. கர்நாடக அரசு இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்துள்ளது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருக்குமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

"பிரஜ்வல் ரேவண்ணா நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதைப் படம் பிடித்துள்ளார். அவரை சகோதரராகவும், மகனாகவும் பார்த்த பலர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்கள். இந்த விவகாரத்தில் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.

தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் நீதிக்காகப் போராட வேண்டியது காங்கிரஸ் கட்சியின் தார்மீக கடமை. கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவின் கடவுச் சீட்டை முடக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளது தெரியும்.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நீதிக்கு எதிரான போராட்டத்தில் நமது பரிவும், ஆதரவும் அவர்களுக்குத் தேவை" என்று ராகுல் காந்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.