கோப்புப்படம் ANI
இந்தியா

மயிலாடுதுறை மீனவர்கள் கைது: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு ராகுல் காந்தி கடிதம்

முதல்வர் மு.க. ஸ்டாலினும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

கிழக்கு நியூஸ்

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

"மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சுதா என்னிடம் தெரிவித்தார். மீனவர்கள் கைது செய்யப்பட்ட நாளன்று, இலங்கை படகு ஒன்று சிக்கலில் இருந்தது. இதைக் காப்பாற்றும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். மீட்புப் பணிக்கு உதவி கோரி இலங்கை அதிகாரிகளைத் தொடர்புகொண்டபோதிலும், சர்வதேச எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும், படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படுவதும் திரும்பத் திரும்ப நடைபெறுவது கடும் கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் தலையிட்டு மீனவர்கள் மற்றும் அவர்களுடையப் படகுகள் விரைவில் விடுவிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று ராகுல் காந்தி தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்கள். இதில் தலையிட்டு மீனவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகளை விரைவில் விடுவித்திட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலினும் ஏற்கெனவே மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.