ராகுல் காந்தி ANI
இந்தியா

இந்தியாவில் வாக்கு இயந்திரம் ஒரு கருப்புப்பெட்டி: ராகுல் காந்தி

யோகேஷ் குமார்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என எலான் மஸ்க் கூறியிருந்த நிலையில், “இந்தியாவில் வாக்கு இயந்திரம் ஒரு கருப்புப்பெட்டி” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தல் ஒன்றில் ஏற்பட்ட வாக்குப்பதிவு முறைகேடுகள் தொடர்பாக சுயேச்சை வேட்பாளரான ராபர்ட் எஃப் கென்னடி என்பவர் தனது எக்ஸ் தளத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பயன்பாட்டை நிறுத்தவேண்டும். மனிதர்கள் அல்லது ஏஐ மூலமாக அதனை ஹேக் செய்யும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும் அது ஆபத்தானது” என்றார்.

இதைத் தொடர்ந்து மஸ்கின் பதிவை பகிர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “இந்தியாவில் வாக்கு இயந்திரம் ஒரு கருப்புப்பெட்டி. வாக்குப்பதிவு இயந்திரத்தை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. தேர்தல் நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதுபோன்று நம்பகத்தன்மை குறையும்போது ஜனநாயகம் கேள்விக்குறியாகும்” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.