ANI
இந்தியா

ராகுல் காந்தியின் வாக்கு அதிகார யாத்திரை: பிஹாரில் நாளை (ஆக. 17) தொடக்கம்! | Bihar | SIR | Rahul Gandhi

`வாக்கு திருட்டு’ என்பது தங்களுக்கான வாழ்வா சாவா பிரச்னை.

ராம் அப்பண்ணசாமி

நாளை (ஆகஸ்ட் 17) பிஹாரின் ரோஹ்டஸ் மாவட்டத்தில் இருந்து `வாக்காளர் அதிகார யாத்திரையை’ காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கவுள்ளார். மாநிலத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த யாத்திரையை அவர் தொடங்குகிறார்.

சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராகவும், வாக்கு திருட்டு விவகாரம் குறித்தும் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக விமர்சனங்களை எழுப்பி வரும் வேளையில் இந்த யாத்திரை தொடங்குகிறது.

முன்னதாக, காங்கிரஸ் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சி. வேணுகோபால், ரோஹ்டஸ் மாவட்டத்தில் உள்ள சசாராமில் இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி ராகுல் காந்தியின் பிஹார் வருகைக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

நடப்பாண்டின் இறுதியில் நடைபெறவிருக்கும் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் பிரச்சாரத்திற்கு இந்த யாத்திரை பெரிதும் உதவும் என்று கூறப்படுகிறது. ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன், இண்டியா கூட்டணியின் பிற தலைவர்களும் யாத்திரையில் பங்கேற்று பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார்கள்.

பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்ட அதே பாதையில் இந்த யாத்திரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் 11-ம் தேதி பட்னாவின் காந்தி மைதானத்தில் ஒரு பிரமாண்டமான பேரணியுடன் இந்த யாத்திரை நிறைவடைகிறது.

`வாக்கு திருட்டு’ என்பது தங்களுக்கான வாழ்வா சாவா பிரச்னை என்று காங்கிரஸ் கட்சி கூறிவருகிறது. இதை ஒட்டி, `லோக்தந்திர பச்சாவ் மஷால் பேரணிகள்’ என பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தங்களது குற்றச்சாட்டுகளை பிஹார் மக்களிடம் எடுத்துச் செல்வதற்கான ஒரு வரைபடத்தை அக்கட்சி அறிவித்துள்ளது.