இந்தியா

மணிப்பூரில் ராகுல் காந்தி!

இம்பாலுக்குச் சென்ற ராகுல் காந்தி அம்மாநிலத்தில் நடந்த கலவரங்களால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்குத் தன் ஆறுதல்களைத் தெரிவித்தார்

ராம் அப்பண்ணசாமி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூலை 8) மதியம் மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலுக்கு சென்றார். அங்கே கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் உள்ள மக்களைச் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.

இன்று காலை அஸ்ஸாம் மாநிலத்துக்குச் சென்றார் ராகுல் காந்தி. கடந்த சில வாரங்களாக அங்கே பெய்து வரும் கனமழையால் அஸ்ஸாம் மாநிலத்தில் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். லக்கிம்பூர் பகுதியில் உள்ள நிவாரண முகாமுக்குச் சென்ற ராகுல் காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அங்கு இருக்கும் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அதன் பிறகு மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலுக்குச் சென்ற ராகுல் காந்தி அம்மாநிலத்தில் நடந்த கலவரங்களால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்குத் தன் ஆறுதல்களைத் தெரிவித்தார். கடந்த வருடம், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மெய்தேய் சமூகத்தினரை அம்மாநில பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி அந்தச் சமூக மக்கள் மணிப்பூர் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.

இதை எதிர்த்து `அனைத்து பழங்குடியினர் மாணவர்கள் சங்கம்’ கடந்த வருடம் மே 3-ல் போராட்டம் நடத்தியது. ஆனால் போராட்டத்தில் கலவரம் வெடித்து, அடுத்த சில மாதங்கள் மணிப்பூர் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்கெட்டது. அடுத்தடுத்து அங்கே நடந்த கலவரங்களால் லட்சக்கணக்கான பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டு, தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர்.

மணிப்பூர் கலவரங்கள் தொடர்பாக மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசியா உய்கேயை இன்று மாலை 5.30 மணிக்கு சந்தித்துப் பேசுகிறார் ராகுல் காந்தி.