படம்: https://x.com/priyankagandhi
இந்தியா

ஹரியாணா ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை: குடும்பத்தினரைச் சந்தித்துவிட்டு ராகுல் காந்தி சொல்வது என்ன? | Rahul Gandhi |

"நீங்கள் எவ்வளவு பெரிய வெற்றியாளராக இருந்தாலும், தலித்தாக இருந்தால் நசுக்கப்படுவீர்கள் எனும் தவறான செய்தியை..."

கிழக்கு நியூஸ்

தற்கொலை செய்துகொண்ட ஹரியாணா ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமார் குடும்பத்தினருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என அம்மாநில முதல்வரை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

2001-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியும் கூடுதல் காவல் துறை இயக்குநருமான பூரண் குமார் அக்டோபர் 7 அன்று சண்டிகரில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு 8 பக்கங்களில் கடிதம் எழுதியுள்ளார் பூரண் குமார். அதில், ஹரியாணா காவல் துறை தலைவர் சத்ருஜித் கபூர் மற்றும் ரோத்தக் காவல் துறை கண்காணிப்பாளர் நரேந்திர பிஜார்னியா உள்பட 8 மூத்த ஐபிஎல் அதிகாரிகள் சாதிய ரீதியாகப் பாகுபாடு காட்டி, அவமதித்து, மன உளைச்சல் கொடுத்து, பொது இடங்களில் அவமதித்து துன்புறுத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் சாதிய ரீதியான பாகுபாடு காரணமாக தற்கொலை செய்துகொண்டது நாட்டை உலுக்கியிருக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஹரியாணா காவல் துறை இயக்குநர் ஷத்ருஜித் கபூரை ஹரியாணா அரசு திங்களன்று கட்டாய விடுப்பில் அனுப்பியது. ரோத்தக் காவல் துறை கண்காணிப்பாளர் நரேந்திர பிஜார்னியா கடந்த வாரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமாரின் மனைவி அம்னீத் பி குமார் மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார். ஷத்ருஜித் கபூர் மற்றும் நரேந்திர பிஜார்னியா பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற வேண்டும், அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என அம்நீத் குமார் கோரிக்கை வைத்துள்ளார். கோரிக்கை ஏற்கப்படும் வரை பூரண் குமாரின் உடற்கூராய்வு மற்றும் இறுதிச் சடங்குக்கு ஒப்புதல் அளிக்க முடியாது எனப் போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் தலைவர்கள் பூரண் குமார் இல்லத்துக்குச் சென்று வந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தான் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தற்கொலை செய்துகொண்ட ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமார் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

"துயரச் சம்பவம் நடந்துள்ளது. அவர் ஓர் அரசு அதிகாரி. நேர்மையான சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ஹரியாணா முதல்வர் தனிப்பட்ட முறையில் உறுதியளித்துள்ளார். இதை மூன்று நாள்களுக்கு முன்பு கூறினார். ஆனால், அது எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தந்தையை இழந்த அவருடைய இரு பெண்களும் கடுமையான அழுத்தத்தில் உள்ளார்கள்.

பிரதமருக்கும் ஹரியாணா முதல்வருக்கும் எதிர்க்கட்சித் தலைவராக நான் சொல்லும் செய்தி இதுதான். அவருடைய மகள்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். இறுதிச் சடங்கை நடத்துங்கள். நாடகத்தை முடிவுக்குக்குக் கொண்டு வாருங்கள். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள்.

இது ஐபிஎஸ் அதிகாரியின் குடும்பத்துக்கான மரியாதை சார்ந்தது மட்டுமல்ல. அனைத்து தலித்களுக்கான மரியாதை சார்ந்தது. ஹரியாணா அரசு நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துவது, நீங்கள் எவ்வளவு பெரிய வெற்றியாளராக இருந்தாலும், தலித்தாக இருந்தால், நசுக்கப்படுவீர்கள் என்கிற தவறான செய்தியை உணர்த்துகிறது" என்றார் ராகுல் காந்தி.

Rahul Gandhi | Haryana IPS Officer | Puran Kumar | Narendra Bijarniya | Haryana DGP | Haryana CM |  Shatrujeet Kapur | Haryana Chief Minister Nayab Singh Saini |