ANI
இந்தியா

மக்களவையை தவறாக வழிநடத்துகிறார் ராகுல் காந்தி: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

4 வருடங்கள் ராணுவத்தில் பணியாற்றினாலும் அக்னிவீர் வீரர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. அக்னிவீர் வீரர்கள் பயன்படுத்தப்பட்டு, தூக்கி வீசப்படும் பணியாளர்கள்

ராம் அப்பண்ணசாமி

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் கலந்து கொண்டு பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாஜக ஆட்சியையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார்.

தன் பேச்சில் ஒரு பகுதியாக, `அக்னிவீர் திட்டத்தில் ராணுவத்தில் சேர்ந்து உயிரிழக்கும் வீரரின் உயிர் தியாகத்தை, வீரமரணமாக கூட பாஜக மதிக்கவில்லை. 4 வருடங்கள் ராணுவத்தில் பணியாற்றினாலும் அக்னிவீர் வீரர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. அக்னிவீர் வீரர்கள் பயன்படுத்தப்பட்டு, தூக்கி வீசப்படும் பணியாளர்கள். அக்னிவீர் திட்டம் ராணுவத்தின் திட்டமல்ல, பிரதமர் மோடியின் திட்டம்’ எனக் குற்றம்சாட்டினார் ராகுல் காந்தி.

இதற்கு பதிலளித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், `அவர் (ராகுல் காந்தி) தவறான தகவல்கள் மூலம் மக்களவையை வழிநடத்தக்கூடாது. எல்லைப் பாதுகாப்பில் ஈடுபடும்போதோ அல்லது போர் நடக்கும்போதோ மரணமடையும் அக்னிவீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.

கோவிட் பெருந்தொற்றின் காரணமாக 2020 மற்றும் 2021-ல் இந்திய இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து, 2022-ல் அக்னிபாத் திட்டத்தை மத்திய இராணுவ அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் நபர்கள் அக்னிவீர் என்று வகைப்படுத்தப்படுவார்கள். இந்த அக்னிவீர் வீரர்கள் 4 வருடங்கள் மட்டுமே இராணுவத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இவர்களுக்கு ஓய்வூதியம் போன்ற சலுகைகள் எதுவும் வழங்கப்படமாட்டாது.