https://www.youtube.com/@rahulgandhi
இந்தியா

மிரட்டலுக்கு பயப்படுபவரல்ல ராகுல் காந்தி: பிஹாரில் முதல்வர் ஸ்டாலின் உரை | Rahul Gandhi | Bihar | MK Stalin

இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஆபத்து வரும்போதெல்லாம் அதற்கான போர்க்குரலை பிஹார் எழுப்பியுள்ளது அதுதான் வரலாறு.

ராம் அப்பண்ணசாமி

`தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடியை ராகுல் காந்தி அம்பலப்படுத்தயதால் அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையர் கூறுகிறார், இதற்கெல்லாம் ராகுல் காந்தி அஞ்சமாட்டார், அவருக்கு எப்போதும் பயமிருக்காது’ என்று முதல்வர் ஸ்டாலின் பிஹாரில் நடைபெற்ற பேரணியில் பேசியுள்ளார்.

காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சிபிஎம், சிபிஎம் (எம்.எல்.), சிபிஐ ஆகிய கட்சிகள் அடங்கிய பிஹார் மாநில இண்டியா கூட்டணி அம்மாநிலத்தில் வாக்காளர் அதிகார யாத்திரை நடத்தி வருகின்றன.

பிஹாரின் முஸாஃபர்பூரில் இன்று (ஆக. 27) நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரையில் சிறப்பு விருந்திராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,

`உங்களையெல்லாம் பார்ப்பதற்காகத்தான் 2,000 கி.மீ. கடந்து நான் இங்கே வந்திருக்கிறேன். சமூக நீதி, மதச்சார்பின்மை ஆகியவற்றின் அடையாளம் லாலு பிரசாத் யாதவ். பிஹார் என்றாலே லாலு பிரசாத் யாதவ்தான் அனைவரது நினைவுக்கும் வருவார். தலைவர் கலைஞரும், லாலுவும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவே பிஹாரைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது. இதுதான் பிஹார் மக்களின் பலம், ராகுல் காந்தியின் பலம், தேஜஸ்வி யாதவின் பலம். இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஆபத்து வரும்போதெல்லாம் அதற்கான போர்க்குரலை பிஹார் எழுப்பியுள்ளது அதுதான் வரலாறு.

பாஜகவின் துரோக அரசியல் தோற்கப்போகிறது, தேர்தலுக்கு முன்பே உங்களது வெற்றி உறுதியாகிவிட்டது. அதனால்தான் இந்த வெற்றியை தடுக்கப் பார்க்கிறார்கள். நியாயமாக முறைப்படி வாக்குப்பதிவு நடந்தால் பாஜக கூட்டணி தோற்றுவிடும் என்பதால் மக்களான உங்களை வாக்களிக்கவிடாமல் தடுக்கிறார்கள்.

சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் ஆணையத்தை மாற்றிவிட்டனர். 65 லட்சம் பிஹார் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயகப் படுகொலை. சொந்த மண்ணில் பிறந்து, வாழ்ந்த மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதைவிட பயங்கரவாதம் இருக்க முடியுமா?

இதற்கு எதிராக என்னுடைய சகோதரர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை வாழ்த்தவே நான் இங்கு வந்திருக்கிறேன். குறிப்பாக, தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடியை ராகுல் காந்தி அம்பலப்படுத்தி வருகிறார், இதற்கு தேர்தல் ஆணையத்தால் முறையான ஒரு பதிலைக்கூட சொல்ல முடியவில்லை.

ஆனால் ராகுல் காந்தி உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும், மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறுகிறார். இந்த மிரட்டலுக்கு எல்லாம் ராகுல்காந்தி பயப்படுவாரா? ராகுல் காந்தியின் வார்த்தைகளிலும், கண்களிலும் எப்போதும் பயம் இருக்காது.

ராகுல் காந்தியை பொருத்தளவில் அவர் அரசியலுக்காக, அல்லது மேடைக்காக பேசுபவர் அல்ல. எதனால் பாஜக அவர் மீது பாய்கிறது என்றால், பாஜக தேர்தலை எப்படி கேலிக்கூத்தாக்கியது என்று ராகுல் காந்தி வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார். அந்த ஆத்திரத்தில்தான் பாஜக அவர் மீது பாய்கிறது.

மக்களின் வாக்குரிமையை பறிக்கும் பாஜகவின் அதிகாரத்தை மக்கள் நிச்சயமாக பறிப்பார்கள். அதைத்தான் பிஹாரில் இப்போது கூடியுள்ள கூட்டம் எடுத்துக்காட்டுகிறது’ என்றார்.