ANI
இந்தியா

ரயில் விபத்துகளுக்கு அரசின் அலட்சியமும் தவறான நிர்வாகத் திறனும் காரணம்: ராகுல் காந்தி

ராம் அப்பண்ணசாமி

`சண்டிகர் - திப்ருகர் விரைவு ரயில் உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பயணிகள் உயிரிழந்ததாக வந்துள்ள செய்தி வருத்தமளிக்கிறது’ என்று ரயில் விபத்து குறித்து தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

நேற்று (ஜூலை 18) உத்தர பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் மதியம் 2.30 மணி அளவில், அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த சண்டிகர்-திப்ருகர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் 4 ஏசி பெட்டிகள் உள்ளிட்ட 12 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 3 பயணிகள் உயிரிழந்தனர், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வட கிழக்கு ரயில்வே பொது மேலாளர் சௌமியா மாத்தூர் இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும் கடுமையாக காயமுற்றவர்களுக்கு ரூ. 2.5 லட்சமும், லேசாக காயமுற்றவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

`தொடர்ந்து ரயில் விபத்துகள் நடைபெறுவது வருத்தமளிக்கிறது. இதற்கு (மத்திய) அரசின் தவறான நிர்வாகத்திறனும், அலட்சியமும் காரணம். இந்த விபத்துக்கு மத்திய அரசு முழு பொறுப்பு ஏற்று, பயணிகளின் பாதுகாப்புக்கும், விபத்துகளைத் தவிர்ப்பதற்கும் என்னென்ன திட்டங்கள் உள்ளது என்று மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்’ என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.

`உ.பி.யில் சண்டிகர் – திப்ருகர் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது, எந்த அளவுக்கு மோடி அரசு ரயில் பாதுகாப்பைச் சீர்குலைத்துள்ளது என்பதற்கு மற்றொரு உதாரணம். பிரதமரும், ரயில்வே அமைச்சரும் இந்திய ரயில்வேயில் நடந்து வரும் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்’ என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே.