ANI
இந்தியா

வாக்குத் திருட்டில் ஈடுபடும் தேர்தல் ஆணையம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு | Rahul Gandhi

"விசாரணையின் முடிவில், ஓர் அணுகுண்டைக் கண்டறிந்தோம். இது வெடிக்கும்போது, நாட்டில் தேர்தல் ஆணையமே இருக்காது."

கிழக்கு நியூஸ்

இந்தியாவில் வாக்குத் திருட்டு நடைபெறுவதற்கான ஆதாரம் இருப்பதாகவும் தேர்தல் ஆணையத்தின் பங்கு இதில் இருப்பதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பிஹாரில் வாக்காளப் பட்டியலில் தீவிர சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பட்டுள்ளன. நாடாளுமன்றத்திலும் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆளும் பாஜகவுக்கு ஆதரவாகவே இந்தச் செயல் நடைபெற்று வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:

"வாக்குகள் திருடப்படுகின்றன. வாக்குத் திருட்டில் தேர்தல் ஆணையம் ஈடுபடுவதற்கான ஆதாரம் உள்ளது. நான் இதைச் சாதாரணமாகச் சொல்லவில்லை. 100% ஆதாரத்துடன் தான் நான் பேசுகிறேன். நாங்கள் ஆதாரத்தை வெளியிடும்போது, வாக்குத் திருட்டை தேர்தல் ஆணையம் அனுமதிப்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரிய வரும். யாருக்காக இதைச் செய்கிறார்கள்? பாஜகவுக்காக அவர்கள் இதைச் செய்கிறார்கள்.

வாக்குத் திருட்டில் எங்களுக்குச் சந்தேகம் இருந்தது. விசாரணைக்குத் தேர்தல் ஆணையம் ஒத்துழைப்பு தராததால் நாங்களே விசாரணையை மேற்கொண்டோம். விசாரணையை நடத்தி முடிக்க எங்களுக்கு 6 மாதங்கள் எடுத்துக்கொண்டன. இதில் ஓர் அணுகுண்டைக் கண்டறிந்தோம். இந்த அணுகுண்டு வெடிக்கும்போது, நாட்டில் தேர்தல் ஆணையமே இருக்காது.

மிக முக்கியமாக, தேர்தல் ஆணையத்தில் உள்ள யார் இதில் ஈடுபட்டிருந்தாலும், நாங்கள் உங்களைச் சும்மா விடமாட்டோம். நீங்கள் நாட்டுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறீர்கள். இது தேசத் துரோகத்துக்கு சற்று சளைத்தது அல்ல. யாராக இருந்தாலும் சரி, ஓய்வு பெற்றிருந்தாலும் சரி நாங்கள் உங்களைக் கண்டறிவோம்" என்றார் ராகுல் காந்தி.

Rahul Gandhi | Bihar Special Intensive Revision | SIR | Votes Theft | Election Commission |