இந்தியா

குவாண்ட் மியூச்சுவல் ஃபண்டின் தலைமை நிதி அதிகாரி ராஜினாமா: செபி விசாரணை காரணமா?

ஃப்ரென்ட் ரன்னிங் முறையைப் பயன்படுத்தி குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் சட்டவிரோதமாக நிதி ஆதாயங்கள் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது

ராம் அப்பண்ணசாமி

இந்தியாவின் பங்குச் சந்தை செயல்பாட்டை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் `செபி அமைப்பு’ குவாண்ட் மியூச்சுவல் ஃபண்டில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் குவாண்ட் மியூச்சுவல் ஃபண்டின் தலைமை நிதி அதிகாரி ஹர்ஷல் படேல் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஹர்ஷல் படேலுக்கு மாற்றாக சசி கட்டாரியா ஜூலை 1 முதல், குவாண்ட் மியூச்சுவல் ஃபண்டின் புதிய தலைமை நிதி அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். தனிப்பட்ட காரணங்களுக்காகத் பதவியை ராஜினாமா செய்வதாக ஹர்ஷல் படேல் தன் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் ரூ. 93 ஆயிரம் கோடி அளவிலான சொத்துக்களை நிர்வகித்து வரும் குவாண்ட் மியூச்சுவல் ஃபண்டில் ஃப்ரென்ட் ரன்னிங் தொடர்பாக நடந்த முறைகேடுகளை முன்வைத்து `செபி அமைப்பு’ விசாரணை நடத்தி வருகிறது.

ஒரு பங்குச்சந்தை தரகு நிறுவனம், பெரும் பங்கு பரிமாற்றம் குறித்த தகவல்களைத் தெரிந்துகொண்டு, அதன் முதலீட்டாளர்களுக்குத் தகவல் தெரிவிக்காமல், அவர்களுக்கு முன்பே பங்குகளை வாங்கி வைத்து லாபம் ஈட்டுவது `ஃப்ரென்ட் ரன்னிங்’ முறை எனப்படும்.

ஃப்ரென்ட் ரன்னிங் முறையைப் பயன்படுத்தி குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் சட்டவிரோதமாக நிதி ஆதாயங்கள் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து அந்நிறுவனத்தின் மும்பை மற்றும் ஹைதராபாத் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள், மடிக்கணினிகள், பிற மின்னணு சாதனங்களை ஆய்வு செய்து, முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதைக் கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.