போதைப் பொருள் பறிமுதல் - கோப்புப்படம் ANI
இந்தியா

பாகிஸ்தான் எல்லையில் போதைப்பொருள் பறிமுதல்: சர்வதேச கும்பலின் முயற்சி முறியடிப்பு!

காவல்துறையால் கைது செய்யப்பட்ட 9 பேர் கடத்தலிலும், ஹவாலா மோசடியிலும் ஈடுபட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

ராம் அப்பண்ணசாமி

எல்லை பாதுகாப்புப் படை மற்றும் ராஜஸ்தான் காவல்துறையுடன் இணைந்து ரூ. 300 கோடி மதிப்புடைய 60.30 கிலோ எடையுடைய போதைப் பொருளை (ஹெராயின்) பஞ்சாப் காவல்துறை கைப்பற்றி, இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஒன்பது பேரைக் கைது செய்துள்ளது.

இதன் மூலம், பாகிஸ்தான் மற்றும் கனடாவைச் சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கும்பலின் எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் பார்மரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகில் இருந்து 60.30 கிலோ மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இரு மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு அடிப்படையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட ஒன்பது நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த எல்லை தாண்டிய கடத்தல் செயலை கனடாவைச் சேர்ந்த இந்திய கடத்தல்காரர் ஜோபன் காலர் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் தன்வீர் ஷா ஆகியோர் முன்னெடுத்ததாக பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவ் தெரிவித்தார்.

மேலும், காவல்துறையால் கைது செய்யப்பட்ட 9 பேரில் கடத்தல்காரர்களும், ஹவாலா மோசடியில் ஈடுபட்டவர்களும் அடங்குவார்கள் என்றும், இந்த கடத்தலில் ஈடுபட்டவர்களின் முழுமையான தொடர்புகளை அம்பலப்படுத்த விசாரணை நடந்து வருவதாகவும் யாதவ் கூறினார்.

விசாரணையின்போது மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.