புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சிறுமியின் உடலைப் பெற்றோர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
புதுச்சேரியில் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை காணாமல் போனார். சிறுமியின் உடல் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சிறுமி கொலை செய்யப்பட்டதற்கு புதுச்சேரியில் போராட்டங்கள் வலுத்தன. சிறுமியின் உடற்கூராய்வு இன்று நடைபெற்றது. இதன்பிறகு, சிறுமியின் உடலை வாங்க பெற்றோர்கள் மறுத்தார்கள்.
இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி சிறுமியின் தந்தையை நேரில் அழைத்துப் பேசினார். பேச்சுவார்த்தையின் முடிவில் சிறுமியின் உடலைப் பெற்றுக்கொள்ள அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
பேச்சுவார்த்தைக்கு முன்பு காவல் துறை அதிகாரிகளிடம் பேசிய முதல்வர், கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் வெளிவராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார். போதைப் பொருள்கள் கோணத்திலும் வழக்கை விசாரிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, சிறுமியின் உடலுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சிறப்பு நீதிமன்றம் மூலம் ஒரு வாரத்திலேயே சிறுமிக்கு நீதி கிடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அவர் உறுதியளித்தார்.