ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCOM) மற்றும் அதன் இயக்குநர் அனில் அம்பானியுடன் தொடர்புடைய இடங்களில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறையான சிபிஐயின் அதிகாரிகள் இன்று (ஆக. 23) சோதனை நடத்தி வருகின்றனர்.
பாரத ஸ்டேட் வங்கிக்கு (SBI) ரூ. 2,000 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. மும்பையில் உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அனில் அம்பானி தொடர்புடைய ஆறு இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
வங்கி நிதி எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டது மற்றும் கடன்கள் வேறு செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டனவா என்பதை கண்டறிய முக்கியமான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை சேகரிப்பதே இன்றைய சோதனைகளின் நோக்கம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக என்.டி.டி.வி. வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ. 2,000 கோடிக்கும் மேல் இழப்பை ஏற்படுத்தியதற்காக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீது வங்கி நிர்வாகம் தரப்பில் புகாரளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூன் 13 அன்று ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அனில் அம்பானியை, மோசடிக்குரிய நிறுவனம் மற்றும் நபர் என்று பாரத ஸ்டேட் வங்கி வகைப்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஜூன் 24 அன்று இது தொடர்பான அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கிக்கு, பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் அனுப்பியது.
அனில் அம்பானியின் குழும நிறுவனங்களுக்கு எதிராக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல வங்கிக் கடன்களுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கக்துறை (ED) நடத்திய விசாரணைக்கு சில வாரங்களுக்குப் பிறகு தற்போது சிபிஐ சோதனை நடைபெறுகிறது.