கோப்புப்படம் ANI
இந்தியா

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி முன்னிலை

பிரியங்கா காந்தி 2.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

கிழக்கு நியூஸ்

வயநாடு நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 2.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ராய்பரேலி தொகுதியில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றதால், ஒரு தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. ராகுல் காந்தி வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, வயநாடு மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இடைத்தேர்தல் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

மஹாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பின்போது வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன்படி, நவம்பர் 13-ல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. பிரியங்கா காந்தி நேரடியாகத் தேர்தலில் களமிறங்குவது இதுவே முதன்முறை.

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோகெரியும் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் பிரியங்கா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டார்கள்.

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடர்ந்து முன்னிலையில் இருந்த பிரியங்கா காந்தி 2,25,331 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

காலை 11.40 மணி நிலவரம்

  1. பிரியங்கா காந்தி - 3,43,340 வாக்குகள்

  2. சத்யன் மோகெரி - 1,18,009 வாக்குகள்

  3. நவ்யா ஹரிதாஸ் - 65,136 வாக்குகள்

  4. நோட்டா - 3190 வாக்குகள் (4-ம் இடம்)

மற்ற வேட்பாளர்கள் யாரும் இதுவரை 1,000 வாக்குகளைக் கூட பெறவில்லை.