வயநாடு நிலச்சரிவுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30 அன்று கனமழை காரணமாகப் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 231 பேர் உயிரிழந்தார்கள். ஏராளமான பொருட் சேதம் ஏற்பட்டது. அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்தது. பிரதமர் நரேந்திர மோடி வயநாட்டுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன் தொடரச்சியாக நடைபெற்ற வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார். நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினராக பிரியங்கா காந்தி பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் பிரியங்கா காந்தி தலைமையிலான கேரள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று நேரில் சந்தித்தது.
அமித் ஷாவுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரியங்கா காந்தி, "ஒட்டுமொத்த கிராமங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. கிராம மக்கள் அனைத்தையும் இழந்துவிட்டார்கள். அவர்களுக்கு ஆதரவுக்கான எந்தவொரு கட்டமைப்பும் இல்லை. அவர்களுக்கான உதவி மேலும் தாமதமானால் நாட்டு மக்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அது எதிர்மறையான செய்தியைக் கொண்டு சேர்க்கும்" என்றார்.
நிவாரண நடவடிக்கைகள் குறித்து வியாழக்கிழமை மாலை தெரிவிப்பதாக அமித் ஷா உறுதியளித்ததாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.