கோப்புப்படம் ANI
இந்தியா

ரே பரலி, அமேதியில் பிரியங்கா, ராகுல் போட்டி?

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் முறையே ரே பரலி மற்றும் அமேதி தொகுதியில் போட்டியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப் பிரதேசத்திலுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 63 தொகுதிகளில் இண்டியா கூட்டணி சார்பில் சமாஜவாதி போட்டியிடுகிறது. காங்கிரஸ் பாரம்பரியமாகப் போட்டியிட்டு வரும் ரே பரலி மற்றும் அமேதி ஆகிய தொகுதிகள் உள்பட வாரணாசி, காஸியாபாத் மற்றும் கான்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடுகிறது.

2019 மக்களவைத் தேர்தலில் அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். ரே பரலியில் போட்டியிட்டு வந்த சோனியா காந்தி இந்த முறை மாநிலங்களவைக்குத் தேர்வானார்.

இதனால், இந்த இரு தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவது யார் என்ற கேள்வி எழுந்தது. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா போட்டியிடுவது குறித்தும் கருத்துகள் பரவி வருகின்றன. இதுதொடர்பான சுவரொட்டிகளும் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ரே பரலியில் பிரியங்கா காந்தியும், அமேதியில் ராகுல் காந்தியும் போட்டியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான இறுதி முடிவு நாளை எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது. அடுத்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.