கச்சா எண்ணெய் விவகாரத்தில் நுகர்வோரின் நலத்தில் மட்டுமே மத்திய அரசு கவனம் கொடுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் பயன்பாட்டில் ஏறத்தாழ 36% ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கிடையில், ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரத்தில் அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து தனது நட்பு நாடுகள் அனைத்து விதமான வர்த்தகங்களையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதனாலேயே அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்களுக்கு 50% வரியையும் அந்நாட்டு அதிபர் டிரம்ப் விதித்துள்ளார்.
இதையடுத்து, பிரதமர் மோடி ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாகத் தெரிவித்துவிட்டார். அடுத்தது சீனாவையும் இந்த நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும் என்று நேற்று (அக்.15) அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். இதனை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:-
“எண்ணெய் மற்றும் எரிவாயுவைப் பொருத்தளவில் இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்கிறது. நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் இந்திய நுகர்வோரின் நலனில் முன்னுரிமை அளிக்க வேண்டியதே மத்திய அரசின் முக்கிய கடமையாக உள்ளது. நமது இறக்குமதி கொள்கைகளும் இதன் அடிப்படையிலேயே வழிநடத்தப்படுகிறது. எரிசக்தி விவகாரத்தில் விலை மற்றும் விநியோகத்தை ஸ்திரத்தன்மையுடன் வைத்திருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் கொள்கை. அதன் அடிப்படையிலேயே கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி மூலங்களை பரந்துபட்ட உலகச் சந்தைகளில் இருந்து நாடு பெற்று வருகிறது. அமெரிக்காவின் கருத்தைப் பொறுத்தளவில், நமது நாட்டின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் பல ஆண்டுகளாக நமது திறன்களை விரிவுப்படுத்தி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளோம். நம் நாட்டின் நிர்வாகம் எரிசக்தி ஒத்துழைப்பில் ஆழமான பிணைப்பை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகிறது.” என்று தெரிவித்தார்