ராகுல் காந்தி (கோப்புப்படம்)
ராகுல் காந்தி (கோப்புப்படம்) ANI
இந்தியா

ஊழல்களின் சாம்பியன் பிரதமர் மோடி: ராகுல் காந்தி

கிழக்கு நியூஸ்

பிரதமர் நரேந்திர மோடி ஊழல்களின் சாம்பியன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாதில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். அப்போது பாஜக 150 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

"இது சித்தாந்தங்களுக்கான தேர்தல். ஒருபுறம் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அரசியலமைப்பையும், ஜனநாயக அமைப்பையும்அழிக்க முயற்சிக்கிறார்கள். மறுபுறம் இண்டியா கூட்டணியும், காங்கிரஸும் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க முயற்சிக்கிறோம். இந்தத் தேர்தலில் 2, 3 பெரிய விஷயங்கள் உள்ளன. வேலைவாய்ப்பின்மை மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. இரண்டாவது பணவீக்கம். ஆனால், பாஜக இந்த விவகாரங்களிலிருந்து கவனத்தைத் திருப்புகிறது. பிரதமர் அல்லது பாஜகவினர் யாரும் இந்தப் பிரச்னைகள் குறித்துப் பேசவில்லை.

சில நாள்களுக்கு முன்பு பிரதமர் மோடி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு, கேள்விகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு நீண்ட நேர்காணலை அளித்தார். இது எடுபடவில்லை. தேர்தல் நிதி பத்திரங்கள் குறித்து விளக்கமளிக்க பிரதமர் முயற்சித்தார். வெளிப்படைத்தன்மைக்காகவே தேர்தல் நிதி பத்திரங்கள் முறை கொண்டுவரப்பட்டதாகப் பிரதமர் கூறுகிறார். இது உண்மையெனில் உச்ச நீதிமன்றம் எதற்காக இந்த முறையை ரத்து செய்ய வேண்டும்.

இரண்டாவது, பாஜகவுக்குப் பணம் கொடுத்தவர்களின் பெயர்களை எதற்காக மறைக்க வேண்டும். எந்தத் தேதியில் பணம் கொடுக்கப்பட்டது என்பதையும் எதற்காக மறைக்க வேண்டும். உலகிலேயே மிகப் பெரிய அளவிலான மிரட்டிப் பணம் பறிக்கும் திட்டம்தான் தேர்தல் நிதி பத்திரங்கள். இந்தியாவிலுள்ள அனைத்துத் தொழிலதிபர்களுக்கும் இதைப் புரிந்துகொண்டுள்ளார்கள், அவர்களுக்கு இதுகுறித்து தெரியும். ஆக, பிரதமர் எத்தகைய விளக்கங்களைக் கொடுத்தாலும், எந்தவித மாற்றத்தையும் உண்டாக்கப்போவதில்லை. ஊழல்களின் சாம்பியன் பிரதமர் என்பதை ஒட்டுமொத்த நாடும் அறியும்.

எத்தனை இடங்களில் வெற்றி என்பது போன்ற கணிப்புகளை நான் செய்வதில்லை. 15-20 நாள்களுக்கு முன்பு வரை பாஜக 180 இடங்களில் வெற்றி பெறும் நினைத்தேன். ஆனால், 150 இடங்களில்தான் வெற்றி பெறுவார்கள் என தற்போது தோன்றுகிறது. நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருவதாக அனைத்து மாநிலங்களிலிருந்தும் தகவல்கள் வருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் நாங்கள் வலிமையான கூட்டணி, மிகச் சிறப்பாக செயல்படுவோம்" என்றார் ராகுல் காந்தி.

மக்களவைத் தேர்தலில் அமேதி அல்லது ரேபரலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவாரா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த அவர், "இது பாஜகவின் கேள்வி, நல்லது. எனக்கு என்ன உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், அதை நான் பின்பற்றுவேன். எங்களுடைய கட்சியில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அனைத்து முடிவுகளையும் மத்திய தேர்தல் குழுதான் எடுக்கும்" என்றார் ராகுல் காந்தி.