இந்தியா

வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

கிழக்கு நியூஸ்

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

வாரணாசியில் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் போட்டியிடும் பிரதமர் மோடி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், கங்கை நதிக் கரையில் தசாஷ்வமேத் படித் துறையில் வழிபட்டார். கங்கா சப்தமியை முன்னிட்டு கங்கை நதிக்கு ஆரத்தி எடுத்தார்.

இதை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கால பைரவர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பிரதமரின் வருகைக்காகக் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதைத் தொடர்ந்து, வாரணாசி ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற பிரதமர் மோடி வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனிருந்தார்.

இதுதவிர, தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 25 தலைவர்கள் கலந்துகொண்டார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யான், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வேட்புமனு தாக்கலின்போது வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தார்கள்.

2014 மற்றும் 2019 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் பிரதமர் மோடி வாரணாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019 தேர்தலில் 6,74,664 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

வாரணாசிக்கு ஜூன் 1-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.